Skip to main content

தீபத்திருவிழா: திரும்பிய பக்கம்மெல்லாம் போலீஸ்... மக்கள் அவதி! 

 

People are suffering by restriction for deepam festival

 

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் தென்னியாவில் புகழ்பெற்றது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட மக்கள் மகா தீபத்தன்று திருவண்ணாமலை நகரில் வந்து குவிவார்கள். அன்றைய தினம் மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை ‘அண்ணாமலைக்கு அரோகரா..’ என பாடியபடி கிரிவலம் வருவார்கள். அதில் ஆயிரக்கணக்கானவர்கள் 2,663 அடி உயரம்முள்ள மலை உச்சிக்கு ஏறி சிவன் பாதம் எனக் குறிப்பிடப்படும் பகுதியை வணங்கிவிட்டுவருவார்கள். அந்த மலை உச்சியில்தான் மாலை சரியாக 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை. தீபத்தன்று மட்டும் திருவண்ணாமலை நகரம், நகரத்துக்குள் நுழையும் 9 சாலைகள், கோவில் வளாகம், கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக மட்டும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பக்தர்கள் கலந்துகொள்ளாத தீபத்திருவிழா நடைபெறுகிறது. தீபத்திருவிழாவின் சாதாரண திருவிழாக்களில் பக்தர்களைக் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்த மாவட்ட நிர்வாகம், பரணி தீபம், மகா தீபம் ஆகியவற்றைக் காண தடை என அறிவித்தது.

 

கடந்த ஆண்டு பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுவிட்டார்கள். சாலை மறியல் செய்து மாடவீதியை வலம்வர அனுமதி பெற்றவர்கள், இரவு கிரிவலமும் வந்தார்கள். இந்தமுறை அப்படி நடந்துவிடக் கூடாதென மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக தமிழ்நாட்டின் பிற மாவட்ட நிர்வாகத்திடமும், உங்கள் மாவட்டத்திலிருந்து பக்தர்கள் திருவண்ணாமலை செல்ல வேண்டாம் என அறிவியுங்கள் எனச் சொல்ல, பெரும்பாலான மாவட்ட நிர்வாகங்கள், மக்களிடம் கார்த்திகை தீபம் காணவும், கிரிவலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் செல்லாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநிலத்திலிருந்து திருவண்ணாமலை நகருக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்கச் சொல்லி கடிதம் எழுதி, அதன்படி செய்யவைத்தது. இப்படி பல கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உள்ளூரிலும், வெளி மாவட்டத்திலும் செய்தது.

 

தீபத்திருவிழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மக்கள் அதிகளவில் வருவதால் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா மொழிகளில் நவம்பர் 7 முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை கிரிவலம் வரவும், அண்ணாமலையார் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் வர வேண்டாம் என வீடியோ வெளியிட்டுப் பரப்பியது. ஹோட்டல், மண்டபங்கள், சத்திரங்களில் வெளிமாவட்ட பக்தர்களைத் தங்கவைக்கக் கூடாது என அறிவுறுத்தி எச்சரித்துள்ளது.

 

இந்நிலையில், நவம்பர் 18 கார்த்திகை மாத பௌர்ணமி, நவம்பர் 19 தீபத்திருநாள் என்பதால் நவம்பர் 17 முதலே நகரத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது காவல்துறை. பக்தர்கள் யாரும் கோவில் பக்கம் வரக் கூடாது, கிரிவலம் வரக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

 

காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி உள்ள பொதுமக்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “கரோனோ பரவலைத் தடுக்க இப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சரிதான். ஆனால், அதேசமயம் உள்ளூர் மக்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். பாதுகாப்பு என்கிற பெயரில் உள்ளூர் மக்களுக்குச் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். கோயிலை சுற்றியே பூமார்க்கெட், காய்கறி மார்க்கெட், வர்த்த மண்டிகள், வியாபார நிலையங்கள் போன்றவை உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வார்கள்.

 

அப்படி வருபவர்களை அங்கு செல்லவிடாமல் தடுப்பதும், நகர தெருக்களில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வர முடியாதபடி லாக் செய்வதும் எங்களுக்குப் பிரச்சனையாக உள்ளது. நகரத்தின் பிரதான சாலைகள் முழுவதும் காவல்துறை வாகனங்கள் வரிசையாக நின்று போக்குவரத்து நெரிசலைத்தான் ஏற்படுத்துகின்றன. பக்தர்களை வர வேண்டாம் எனச் சொல்லிவிட்டு பின் எதற்காக இத்தனை கெடுபிடிகள். தீபத்திருவிழாவிற்காக மட்டும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு போலீசார் தேவையா” என்று தெரிவிக்கின்றனர்.