ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றக்கூடிய பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்து வருகிறது. பழனியில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள் நாள்தோறும் பூஜை முறைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மலைமீது உள்ள முருகன் கோவிலிலும் , மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி முருகன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியஆவுடையார் கோவில் போன்றவற்றில் ஆறு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
கோயில் அர்ச்சகர்கள் பூஜை நேரங்களில் கோவில்களை சுத்தம் செய்து முறையாக பூஜைகளை செய்து வருகின்றனர். பழனியில் செயல்பட்டு வரக்கூடிய இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பழனியில் உள்ள மலை கோயில்களுக்கு நாள்தோறும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி கோயிலுக்கு செல்லும் இந்து அமைப்பினர் கோயிலில் பணியில் இருக்கக்கூடிய அர்ச்சகர்களை தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி மிரட்டக் கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருஆவினன்குடி கோவிலுக்கு சென்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவரும், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவருமான சாமிநாதன் என்பவர் திருஆவினன்குடி முருகன் கோயிலில் பணியிலிருந்த அர்ச்சகர் ஒருவரை மிரட்டி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கோயிலில் பணியில் இருக்க கூடிய அர்ச்சகர்கள் முறையாக ஆகமவிதிகளை பின்பற்றுவதில்லை, பூஜை முறைகள் சரிவர நடைபெறவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி மிரட்டல் விடுத்து ஆதாயம் தேடி வருவதாக ஆதாரம் அர்ச்சகர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று மலைமீது செல்லக்கூடிய இந்து அமைப்பினரும் கோயில் அதிகாரிகளை மிரட்டியும், சிவாச்சாரியார்களை மிரட்டியும் ஆதாயம் தேடுவதாக ஆன்மிகவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்து அமைப்பின் தலைவர்களிடம் இது போன்ற நபர்களை குறிப்பிட்டு புகார் தெரிவிக்க போவதாகவும் பழனியில் உள்ள அர்ச்சகர்களும், ஆன்மிகவாதிகளும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மலைமீது உள்ள போகர் சன்னதியில் தகராறில் ஈடுபட்டு காவல்நிலையம் வரை புகார்கள் சென்று பின்னர் இந்து முன்னணி தலைவர்களால் சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் தொடர்ந்து பழனியில் உள்ள கோவில்களில் இந்து அமைப்பினரின் மிரட்டல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோயில் இணை ஆணையர் கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இதுபோன்று மிரட்டல் நபர்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.