![Passenger umbrella for public use!](http://image.nakkheeran.in/cdn/farfuture/h2hw44_BnnljHYB1rgPliedridv51d0rESy9OE3v0TM/1652546786/sites/default/files/inline-images/PA3232111.jpg)
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 6- வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சக்கரபாணி தற்போது தமிழக உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் சக்கரபாணியும் வாக்களித்த மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறார். அத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு ரூபாய் 930 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்களின் நலன் கருதி குக்கிராமங்கள் முதல் நகரம் வரை தொகுதி மக்களின் வசதிக்காக நூற்றுக்கணக்கான பயணியர் நிழற்குடைகள், கலையரங்களை அமைச்சர் சக்கரபாணி கட்டிக் கொடுத்திருக்கிறார். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்ததால், அமைச்சர் சக்கரபாணி கட்டிக்கொடுத்த கலையரங்குகளும், பயணியர் நிழற்குடையும் பராமரிப்பின்றிப் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது.
அதைக் கண்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கலையரங்கம் மற்றும் பயணியர் நிழற்குடைகளை தங்கள் சொந்தப் பணத்தில் செலவு செய்து, புதுப்பித்ததுடன் மட்டுமல்லாமல் அமைச்சர் நிதியில் கட்டப்பட்டது என்பதை நினைவுக் கூறும் வகையில் பெயர் பலகையும், புதிதாக வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வருகிறார்கள். அதைக்கண்டு தொகுதி மக்களும், அந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளைப் பாராட்டையும் வருகிறார்கள்.