![Panchayat vice-presidential election thorn in the side!](http://image.nakkheeran.in/cdn/farfuture/7Zx6AaQcYVVZfHekvM5gFVx9jT3dlrwoABE5Zz8_SYw/1634925965/sites/default/files/inline-images/police33322.jpg)
திண்டுக்கல் ஒன்றியத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் துணைத்தலைவராக இருந்த அன்னகாமாட்சி இறந்து விட்டதால், அந்த வார்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஆதரவாளரான கணேசன் வெற்றி பெற்றார். இதையடுத்து துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி மலரவன் தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து ஊராட்சியில் அ.தி.மு.க. ஆதரவு உறுப்பினர்கள் 8 பேர் தி.மு.க. ஆதரவு உறுப்பினர்கள் 6 பேரும் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரும் ஆக மொத்தம் 15 உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது வெற்றிபெற்ற கணேசன் துணைத் தலைவராக போட்டியிட உறுப்பினர்களிடம் ஆதரவு கோரி இருந்தார் பாஜக உறுப்பினரான அர்ஜுனன். அ.தி.மு.க. ஆதரவுடன் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. உறுப்பினர்க்கு ஆதரவாக ஏராளமானோர் கூடி இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏ.எஸ்.பி. அருண் கபிலன் பயிற்சி டி.எஸ்.பி. இலக்கியா மற்றும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
அதுபோல் ஊராட்சி மன்றத்தில் வெளியிலும் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தல் தேர்தலில் பங்கேற்கவில்லை என கூறி தி.மு.க. உறுப்பினர்கள் கணேசன், முருகன், ராஜமாணிக்கம், கனகராஜ், சிவகாமி, விஜயலட்சுமி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் யூனியன் சேர்மன் ராஜா மற்றும் ஊராட்சி தி.மு.க. உறுப்பினர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தலை முறையாக நடத்த புகார் அளிக்க உள்ளோம் என்று கூறி விட்டு சென்றனர். ஊராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகரன் ஆசியுடன் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்ததின் பெயரில் அர்ஜுனன் துணைத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி மலரவன் வழங்கினார். அதுபோல் துணைத் தலைவராக வெற்றி பெற்ற அர்ஜுனனுக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜசேகரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.