தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டதால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்த நிலையில், சில நாட்களாகப் பெய்த மழையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து வீணானதால் கடந்த ஒரு வாரமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலை நிறுத்தி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோன்களுக்கு ஏற்றிச் செல்லும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வயலில் விளைந்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ள விவசாயிகளின் நெல்மணிகளும் நனைந்து முளைக்கத் தொடங்கிவிட்டது. இதனால் உடனே நெல் கொள்முதலைத் தொடங்க கோரி விவசாயிகள் ரெகுநாதபுரம் உள்பட பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் நடந்த ஊர்களில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் 50- க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொள்முதல் செய்த நெல் மழையால் நனைந்து வருகிறது.
இந்த நிலையில் தான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உணவுத்துறை அமைச்சருக்கு அவசரமாக சில கடிதங்களைக் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து நெல் சேதமாகிறது. உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்கும் விதமாக உடனே நெல் கொள்முதலைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 22/07/2021 முதல் நெல் கொள்முதல் தொடங்கும் என்கின்றனர் அதிகாரிகள்.