தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக தமிழே இருக்க வேண்டும். கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் இந்தியும் ஆங்கிலமும் நுழைக்கப்படுகிறது அதனை மாற்ற வேண்டும் என்ற குரல் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் கடந்த 2 நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். ஆசியாவில் உயரமான 35 அடி உயர குதிரை சிலைக்கு வரலாறு காணாத வகையில் 2750 மாலைகள் பக்தர்களால் காணிக்கையாக அணிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யனாருக்கு அர்ச்சனை செய்துள்ளனர். அர்ச்சனைக்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வசூல் செய்யும் தொகைக்கு ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்டன. இதனைப் பார்த்த இளைஞர்கள் அய்யனார் கோயில் அர்ச்சனைச் சீட்டில் ஆங்கிலமா? தமிழில் அர்ச்சனை சீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் பதிவு செய்தனர். ஏராளமான இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பிய நிலையில் உடனடியாக ஆங்கிலத்தில் இருந்த அர்ச்சனைச் சீட்டை தமிழில் மாற்றி வழங்கி வருகின்றனர்.
இளைஞர்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய அறநிலையத்துறைக்கு இளைஞர்கள் நன்றி கூறியுள்ளனர்.