Order revoking the order of the separate judge and ordering a two-judge session work order!

34 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கத் தமிழ்நாடு அரசிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வருவாய்த் துறையில் பணியாற்றி வந்த தனது கணவர், 1988ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானதாகக் கூறி, கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்கக் கோரி, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரோசா என்பவர் அரசுக்கு விண்ணப்பித்தார். அதே நேரத்தில் மற்றொரு பெண், அரசு ஊழியரின் மனைவி எனக் கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரியதால், சட்டப்பூர்வமான மனைவி யார் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வர அரசு அறிவுறுத்தியது.

Advertisment

இதன்படி, ரோசா, தன்னைச் சட்ட பூர்வ மனைவி என அறிவிக்கக்கோரி 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரோசாவிற்கு ஆதரவாக 2013ம் ஆண்டும் தீர்ப்பு வந்தது. இதையடுத்து, தன் மகன் பிரபாகரனுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின் விண்ணப்பித்துள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ரோசா மற்றும் பிரபாகரன் தாக்கல் செய்த மனு நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி நக்கீரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரியா ரவி ஆஜரானர். பின்னர் இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் தாமதத்திற்கு மனுதாரரையோ அல்லது அரசையோ குறைகூற முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்ததே இந்த தாமதத்திற்குக் காரணம் என்றும், அதனால் பிரபாகரனுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்கப் பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும், பிரபாகரனுக்குத் தகுதிக்கேற்ப 3 மாதத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு என்பது ஒரு முன்மாதிரியாகக் கருதக்கூடாது எனவும், ஏனெனில் இந்த உத்தரவு இவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்று தெரிவித்தனர்.