முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி, ஓ.பி.எஸ். மீது நான் தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கு 11.12.2021 டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் அத்தீர்ப்பிற்காகக் காத்துள்ளேன். சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அது அமையும்.
இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகப் பேசுவதாக கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி இந்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றனர். இவர்கள் ஒருங்கிணைப்பாளரா என்பதற்கான வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது. அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும். சசிகலா, போட்டி பொதுக்குழுவைக் கூட்ட வாயப்புள்ளது.
தேர்தலில் தோற்று கட்சியே அசிங்கமாக இருக்கும் நிலையில் மா.செ கூட்டம் தேவையா? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு கேட்கும் மனநிலையிலேயே நிர்வாகிகள் இல்லை. கொள்ளை அடித்த முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடட்டும். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களே அதிமுகவிற்கு கிடைக்கும். கோவை, சேலம் உட்பட ஒரு மாநகராட்சியும் அதிமுக வெல்லாது. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறும் தகுதியுடன், குறையற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
தஞ்சையில் மழை வெள்ளம் பாதித்த பகுதியைப் பயந்து பயந்து இரவில் சென்று பார்வையிடுகிறார் எடப்பாடி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 90 விழுக்காடு பணத்தை எடப்பாடி பழனிசாமி கொள்ளை அடித்தார். ஊழலில் ஈடுபட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை என திமுக மீது வருத்தம் உள்ளது. சசிகலா தங்களுக்கு முன்பாக ஆய்வு செய்துவிடுவாரோ என்ற பயத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
சசிகலாவை ஏற்றால் மட்டுமே கட்சி நிலைக்கும். சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்வார். நகர்ப்புற தேர்தலின் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு பெரிதாக இல்லை. கட்சிக்காக பேசுகிறேன். சசிகலாவை இருவரும் தேடிச் சென்று கட்சியில் இணைக்க வேண்டும். சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக ஓபிஎஸ் மனநிலை வானிலை போல அவ்வப்போது மாறும். சசிகலா பெயரை வைத்து கட்சிக்குள் நாடகமாடுகிறார் ஓபிஎஸ்.
சர்வாதிகாரம் செய்ததாக ராமதாசை கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால், அவருடன் கூட்டணி வைத்துள்ளனர் இன்று. சாதி பற்றி அறியாதவர் கே.பி.முனுசாமி. அவர் சாதி பேசியதால்தான் ஜெயலலிதாவால் சில காலம் வெளியேற்றப்பட்டார். கே.பி. முனுசாமி, சாதி தலைவர். பாமக தொடர்பாக அவர் ஒருபோதும் பேசமாட்டார். கட்சியில் தற்போது ஆட்சி மன்ற குழு கூடுவதே இல்லை.
நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் நீக்கி வருவது போல, சசிகலாவும் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களை நீக்க முடியும். அதிமுகவில் செயல்படாத நிர்வாகிகளை நீக்க சசிகலாவுக்கும் உரிமை உண்டு. 700 விவசாயிகளின் சமாதியில் எழுதப்பட்டதுதான் வேளாண் சட்டம் வாபஸ் என்பது” என்று கூறினார்.