முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் நேற்று வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஓபிஎஸ்ஸின் மனுத்தாக்கலை தொடர்ந்து சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை தொடர்பாக ஆரம்பத்திலேயே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த ஓபிஎஸ், ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக இருந்த தாங்கள் (ஓபிஎஸ்-இபிஎஸ்) இணைந்த பொழுது எனக்கு கொடுக்கப்பட்ட துணை முதல்வர் பதவியை வேண்டாமென்று மறுத்தேன். ஆனால் பிரதமர் மோடியை சந்தித்த பொழுது அவர் தந்த வலியுறுத்தலைத் தொடர்ந்து அந்த பதவியை ஏற்றுக்கொண்டேன் என வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ், பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் வேட்புமனு தாக்கல் நிகழ்விலும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.