Skip to main content

ஓ.பி.எஸ். மீதான வழக்கு; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
OPS against case Supreme Court action order

கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்லாது அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பியான பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மீது வழக்கானது பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு 2012ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருந்தது. அதன் பிறகு மீண்டும் அதிமுக ஆட்சியின் பொழுது ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக கொடுக்கப்பட்ட அனுமதியை அதிமுக தலைமையிலான தமிழக அரசு திரும்பப் பெற்றது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதிகேட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சிவகங்கை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிவகங்கை நீதிமன்றம் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் வழங்கப்பட்ட   தீர்ப்பில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கைத் திரும்பப்பெற அனுமதித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிவகங்கை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துவிட்ட காரணத்தினால் அவர்களுக்கு எதிரான வழக்கை மட்டும் கைவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். 

இந்த வழக்கு விசாரணையை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கும் மாற்ற வேண்டும் எனச் சிவகங்கை நீதிமன்றத்திற்கு ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நவம்பர் 27ஆம் தேதிக்குள் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆவணங்களைப் பெற்ற பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சம்மன் அனுப்பி அவர்களை நேரில் ஆஜராகும்படி செய்து பிணைப்பத்திரத்தை பெற்று ஜாமீன் வழங்கலாம் என மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்களையும் கொடுத்திருந்தார்.

OPS against case Supreme Court action order

இதனை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டில் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (29.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் எதிர் மனுதாரர்கள் 4 வாரத்திற்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்