சென்னை கே.கே.நகரில் செயல்பட்டுவரும் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் தரப்பில் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அவரை கைதுசெய்து எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதிவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜகோபாலன் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விரைவில் வெளியிடுகிறது தமிழக அரசு. மேலும், பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
ஆசிரியர்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
இதனிடையே, ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில், அவர் பணியாற்றியப் பள்ளிக்கு சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.