திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சிங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவர் கடந்த 40 ஆண்டுகளாக அரிசி ஆலையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நில விற்பனை இடைத்தரகர்கள் மூர்த்தி மற்றும் நடராஜன் ஆகியோர் சண்முகத்திடம் திருப்பூர் பகுதியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாயை கடந்த 2016-ல் வாங்கியுள்ளார். அதன் பிறகு 3 ஏக்கர் நிலத்தை வாங்கிய மூர்த்தி மற்றும் நடராஜன் ஆகியோர் அதனை சண்முகம் பெயரில் பத்திரப் பதிவு செய்யாமல் தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். இதை அறியாத சண்முகம் நிலத்தின் உரிமையாளரிடம் கேட்ட போது ஏற்கனவே நிலத்தை பத்திரப் பதிவு செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் மூர்த்தி மற்றும் நடராஜனிடம் கேட்ட போது தகராறு செய்ததாகவும் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து, திருப்பூரில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நடராஜன் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.