தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாகப் பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு 'ஓமிக்ரான்' கரோனா’ எனப் பெயரிட்டுள்ளது.
ஓமிக்ரான் வகை கரோனாவை தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த உத்தரவில், மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரிக்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். கரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் பரிசோதனைகளை அதிகப்படுத்திக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.