கரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான பள்ளிக்கல்வித்துறை உத்தரவில், "கரோனா தடுப்பு தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும். ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்; தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வகுப்புகளை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.