சர்வதேச 44வது ஒலிம்பியாட் செஸ் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் ஜுலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான முறையில் சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசும், விளையாட்டுத் துறையும் செய்து வருகின்றன. ஒலியம்பியாட் போட்டியை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளை கொண்டு கடந்த 10 தினங்களாக சதுரங்கப்போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓலியம்பியாட் ஜோதி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணமாகின்றது. மாவட்டத் தலை நகரங்களில் அதை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் ஏந்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜுலை 26ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளி மாணவ – மாணவிகள், தன்னார்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஒலியம்பியாட் ஜோதியை நகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கொண்டுவருவது என முடிவுசெய்தனர்.
இதற்காக விளையாட்டுத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பலதுறைகளுக்கும் பேரணி செல்லும் பாதையில் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து வந்து பேரணி வரும் வழியில் நிறுத்தவேண்டும், அந்த இடத்தை கடக்கும்போது அங்கிருப்பவர்கள் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
ஜுலை 25ம் தேதி நள்ளிரவு முதல் திருவண்ணாமலை நகரம் மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதுமே பலத்த மழை. ஆரணி பகுதியில் 20 செ.மீ, கண்ணமங்களம் பகுதியில் 23 செ.மீ, போளுர் 28 செ.மீ, வந்தவாசி, செய்யார் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலுமே பலத்த மழை. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. ஜுலை 26ம் தேதி காலை 6 மணிக்கும் மழை பெய்துகொண்டு இருந்தது. மழையால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பலரும் தொடர்புகொண்டு கேட்டனர். ஆனால் அந்தத் தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை.
காலை 6.30 மணிக்கே தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மாணவ,மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொட்டும் மழையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறக்கிவிட்டனர். முக்கிய அதிகாரிகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துக்கொண்டும், ஜெர்கின் அணிந்துகொண்டும் நின்றிருந்தனர். மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர்.
ஒலியம்பியாட் ஜோதி பேரணி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் முன்னிலையில் காலை 7.30 மணிக்கு தாலுக்கா அலுவலகத்தின் முன்பிருந்து துவங்கியது. நகரத்தின் முக்கிய வீதிகளில் பேரணி செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். முக்கிய வீதிகளில் பேரணி நடைபெற்றதால் நகரத்தின் போக்குவரத்து அனைத்தும் மாற்றிவிடப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது தெரியாமல் கொட்டும் மழையில் பள்ளிக்கு பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற பெற்றோர்கள் தவித்துப்போய்விட்டனர். தொப்பலாக மழையில் நனைந்தபடி தங்கள் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு சென்றுவிட்டார்கள்.
பேரணியில் கலந்துகொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் மழையில் தொப்பலாக நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி இருந்தனர். பேரணியில் கலந்துகொண்டபின், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒருமணி நேரம் மழை தூரலில் நனைந்தபடி அங்கு நின்றிருந்தனர். அது முடிந்ததும் மாணவர்களை அப்படியே பள்ளிக்கு அழைத்து சென்றார்கள் ஆசிரியர்கள். இப்படி நடந்துகொண்டது பொதுமக்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேறு நிகழ்ச்சி என்றால் ஒத்திவைத்திருக்கலாம், நாளை மறுநாள் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதை ஒத்திவைக்க முடியாது என்பதால் இப்போதே நடத்தவேண்டிய கட்டாயம் என்றார்.
மழை என்பதால் மாணவ, மாணவிகள் இல்லாத வகையில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியிருக்கலாம் அல்லது சிம்பளாக நடத்தி முடித்திருக்கலாம். ஆனால் கொட்டும் மழையில் மாணவ.மாணவிகளை 3 மணி நேரம் நனையவைத்தது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெற்றோர்களையும் கோபத்துக்கு ஆளாகும் வகையிலேயே அதிகாரிகள், ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளார்களே என பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.