Skip to main content

ஆய்வாளர் காமராஜை துரத்தும் பழைய பாவச் செயல்! -காக்கிகள் வட்டாரம்  கசியவிடும் விவகாரம்!

Published on 08/03/2018 | Edited on 09/03/2018
inspector kamaraj


திருச்சி – திருவெறும்பூரில் வாகன சோதனை நடத்தியபோது, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், கீழே விழுந்து, தலையில் அடிபட்டு,  உஷா என்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காமராஜ்.

 

இதனைத் தொடர்ந்து, காவல்துறை வட்டாரங்களில் இருந்து  ஆய்வாளர் காமராஜ் குறித்த பழைய விவகாரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒன்று -
2002-இல் திருவாரூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக காமராஜ் பணியாற்றியபோது காவலர் ஒருவர் விடுமுறை கேட்கிறார். அதற்கு, அந்தக் காவலரை கெட்ட வார்த்தையால் கடுமையாகத் திட்டுகிறார். தன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாத அந்தக் காவலர், துப்பாக்கியை எடுத்து காமராஜை சுடுகிறார்.  குண்டு தவறுதலாக வேறு ஒருவர் மீது பாய்கிறது. அதனால், அந்தக் காவலர் மனம் உடைந்து,  தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்கிறார். அந்தப் பாவம்தான் காமராஜை இப்போது துரத்துகிறது என,  15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை இப்போது விவரிக்கிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Case against former Minister Kamaraj; “Investigation to be completed within 6 months” - High Court

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.