/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chinnasalem-station.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் திருவிக நகரைச் சேர்ந்தவர் 65 வயது சேகர். இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர் அங்கீகாரம் பெற்ற பத்திர விற்பனையாளராக இருந்துவந்துள்ளார். தற்போது வயது மூப்பின் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இவருக்குஉடன்பிறந்தவர்கள் தம்பி ஒருவர், இரண்டு சகோதரிகள். இவர்களுக்குத் திருமணமாகி வெளியூரில் வசித்துவருகின்றனர். இவரது தாய், தந்தையர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்கள். அதனால் சேகர் மட்டும் தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார். இவருக்கு சமீப காலமாக திருநங்கைகளுடன் நெருக்கமான பழக்கம் இருந்துவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், இவர் சம்பாதித்த பணத்தில் 30 சவரன் நகை மற்றும் கையில் மோதிரங்களை அணிந்துகொண்டு பகட்டாக வெளியே சென்றுவருவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று (28.11.2021) மாலை 3 மணியளவில் சேகருக்கு அவ்வப்போது உதவியாக இருந்துவந்த அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சேகருக்கு மதியம் சாப்பாடு வாங்கித் தருவதற்காக சேகர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது சேகரின் கால்கள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லை, வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்த தகவலை வெங்கடேசன் சின்னசேலம் போலீசாருக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடனடியாக தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சிடிஎஸ்பி ராஜலட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நகைக்காக சேகர் கொலை செய்யப்பட்டாரா? இந்தக் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சின்னசேலம் நகரில் பட்டப்பகலில், கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)