சென்னையில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மேலும் இரண்டு கண்காணிப்புக் காட்சிகள் கிடைத்துள்ளன.
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஐ.டி. கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த மே 7- ஆம் தேதி அன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய போது, கொலைச் செய்யப்பட்டனர். இது தொடர்பாக, ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ரவி ராய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஐந்து நாட்கள் அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். தம்பதியை புதைத்த நெமிலிசேரிக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நடந்தவற்றை நடித்துக் காட்டினர். அதை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், இருவரையும் கொலை நடந்த மயிலாப்பூர் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
மேலும், ஓட்டுநர் கிருஷ்ணாவின் தந்தை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, நேபாளத்திற்கு சென்ற நிலையில், அவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, புதிதாக இரண்டு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், ஓட்டுநர் கிருஷ்ணா கொலை செய்துவிட்டு, பண்ணை வீட்டிற்கு காரில் செல்வதும், மற்றொன்றில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதவை அழைத்து வர கிருஷ்ணா காரில் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
முதிய தம்பதியை காலையில் கொலை செய்துவிட்டு, கிருஷ்ணா செல்லும் நேரத்தை வைத்து ஆதாரங்களைத் திரட்டும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.