Skip to main content

சேலத்தில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்; கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி; 38 பேர் பலத்த காயம்

Published on 01/09/2018 | Edited on 01/09/2018


 

y2


சேலத்தில் நள்ளிரவில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாயினர். பலத்த காயம் அடைந்த 38 பேருக்கு சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரவிந்த் பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் பேருந்து,  நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம்  பெங்களூரில் இருந்து 24 பயணிகளுடன் யாத்ரா டிராவல்ஸ் என்ற படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்து சேலம் வழியாக கொச்சின் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 


நள்ளிரவு 1.15 மணியளவில் (ஆகஸ்ட் 31 - செப். 1, 2018), சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, சேலம் குரங்குசாவடி அருகே சாலையோரமாக பழுதாகி நின்ற பொலீரோ பிக்அப் வேன் மீது பலமாக  மோதியது. இதில் அந்த வேன் நிலைகுலைந்தது. 

 

v


அந்த வேன் குண்டு மல்லி பூக்களை பாரம் ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சரானதால் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இண்டிகேட்டர் விளக்குகள் போடப்பட்டு இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்து வேன் மீது மோதிய வேகத்தில் சாலையின்  குறுக்கே உள்ள தடுப்புகளை உடைத்துக்கொண்டு, அடுத்த பக்கமுள்ள சாலையில் பாய்ந்து சென்று மீண்டும் சேலத்துக்குச்  செல்லும் வழியை நோக்கி திரும்பி நின்றது.


இதை சற்றும் எதிர்பாராத பெங்களூரில் இருந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து, விபத்தில் சிக்கிய பேருந்து மீது அசுர வேகத்தில் மோதியது. அதே வேகத்தில் அந்த ஆம்னி பேருந்து சர்வீஸ் சாலையில் தலைகுப்புற  கவிழ்ந்தது. 

 

an


பெங்களூரில் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வார விடுமுறையைக் கழிக்க சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக இரவு 9.30 மணியளவில் ஆம்னி பேருந்தில் ஏறியுள்ளனர். அதனால் பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ள நேரத்தில்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.


இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள்.  சேலம் சாலை விபத்தில் கேரளாவை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேர் பலியாகியுள்ளனர்.

 சிறுவன் மட்டும் காயமின்றி உயிர் பிழைத்தான்.  சிறுவன் ஈத்தனின் தாத்தா மோன்சி ஜோசப், 

பாட்டி அல்போன்சா, தந்தை சிஜி வின்செண்ட்,  தாய் பினு மேரி வின்செண்ட் ஆகிய நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே இருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.  இவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.


ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.


விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதோடு இறந்தவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரிக்க முடியாமல் காவல்துறையினரும் தடுமாறினர். இதனால் உறவினர்களுக்கு தகவல் அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமாரும் (40) பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் 38 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 17 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 21 பேர் கருப்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம்: 


1. சுரேஷ்குமார் 2. பழனியம்மாள் (தர்மபுரி) 3. பாலச்சந்திரன் (பெங்களூர்) 4. ஷீலா (கேரளா&பாலக்காடு) 5. ஏஞ்சல் (கேரளா) 6. தாமஸ் (கிருஷ்ணகிரி) 7. ஆன்சில் (கேரளா) 8. லஹரி (கேரளா) 9. விமலா (தர்மபுரி) 10. ஜாய்ஸ் (தர்மபுரி) 11. பிரதீப்  (கேரளா) 12. கோபாலகிருஷ்ணன் (பெங்களூர்) 13. திலீப் (நல்லம்பள்ளி) 14. எபின் ஆப்ரஹாம் (கோட்டயம்) 15. சந்திரன்  (கேரளா) 16. கேம்ப் (கேரளா) 17. அடையாளம் தெரியாத ஆண் குழந்தை.


விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள  நிலையில், அதிமுக எம்பி பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு  நேரில் சென்று சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தனர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரும் நேரில் வந்து சிகிச்சை  விவரங்களை கேட்டறிந்தார். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.