சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட 35 ஆயிரம் லிட்டர் ஆயிலை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டது. இந்த லாரியை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் ஓட்டி சென்றார். நேற்று காலை ஆறு மணி அளவில் அந்த லாரி திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று முந்திச் செல்ல முயன்றது.
அதற்கு வழி விடுவதற்காக டேங்கர் லாரி டிரைவர் கேசவன் வலது பக்கமாக லாரியை திருப்பும்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் கேசவன் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் சாலையில் கொட்டி வழிந்தோடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் குடங்களிலும், கேன்களிலும் அந்த ஆயிலை அள்ளி சென்றனர். தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் மற்றும் பலர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆயிலை அள்ளிசென்ற பொதுமக்களிடம் இந்த ஆயிலை பயன்படுத்த முடியாது, இதை எடுத்துச் செல்வதனால் எந்த பயனும் இல்லை என்று அப்பகுதி பொதுமக்களை எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள். விபத்தில் கவிழ்ந்த லாரியை ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர். சென்னையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு ஆயிலை நேற்று செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து வழிந்தோடிய ஆயிலை மக்கள் கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற சம்பவம் சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகளை வியப்பில் ஆழ்த்தியது.