தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருக்கு பொய்யான தகவலை அளித்து, சட்டமன்ற உரிமை மீறலில் ஈடுபட்ட பெரியார் பல்கலை துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அரசை வலியுறுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப். 11) உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது சேலம் மேற்கு எம்.எல்.ஏ. பாமகவைச் சேர்ந்த அருள் பேசியதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் சம்பவங்களை எல்லாம் பார்த்தால் கண்ணீர் விட்டு அழ வேண்டும்போல் இருக்கும். இந்தப் பல்கலையில் 200 புள்ளிகள் இட ஒதுக்கீட்டில் சமூக நீதி மீறப்பட்டு, முறைகேடான பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அவற்றின் அடிப்படையில் தமிழக முதல்வரை சிலர் சந்தித்து மனுக்களைக் கொடுத்தனர். அதன்பேரில், முதல்வரும் பல்கலையில் விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்தக்குழுவின் விசாரணை முடிவு என்னவென்று இதுவரை தெரியவில்லை.
ஒரே நேரத்தில் ஒருவர், முழுநேர பிஹெச்டி படிக்கிறார். அறநிலையத்துறையில் ஓதுவாராக இருக்கிறார். தனியார் கல்லூரியில் முழுநேர பேராசிரியராக இருக்கிறார். இப்படி மூன்று போலிச்சான்றிதழ் தயாரித்து கடந்த 2004ம் ஆண்டில், பெரியார் பல்கலையில் ரீடர் பணியில் சேர்ந்துவிட்டார். இன்றைக்கு அவர் தமிழ்த்துறையின் தலைவராக இருக்கிறார். இங்கு சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பதிவாளர் நியமனம் செய்யப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒருவர், பொறுப்பு பதிவாளராக இருக்கிறார்.
ஆட்சிக்குழு பொருள்நிரல் சட்டத்திற்கு புறம்பான செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். உதவி பேராசிரியர் ஒருவர் ஆட்சிக்குழு பொருள்நிரல் தொடர்பாக ஒரு மனு கொடுத்தார். அதற்காக அவரை பல்கலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி பேராசிரியர் நீதி கேட்டுச் செல்கிறார். உடனே அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பாமக எம்எல்ஏ அருள் பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''பெரியார் பல்கலையில் நிரந்தர பதிவாளரை நியமிக்க தெரிவுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நல்லதம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
இந்தநிலையில், தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ''உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது, எம்.எல்.ஏ அருளின் உரைக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, உண்மைக்கு மாறான தகவலை சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உண்மை என்னவெனில், நீதிபதி நல்லதம்பி கமிட்டி, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த பல்கலை ஊழியர்கள் நான்கு பேர் மீது, உள் விசாரணை நடத்தி, அந்த நான்கு பேரை டிஸ்மிஸ் செய்த கமிட்டி ஆகும். இந்த உள் விசாரணை கமிட்டியை, 'ஊழல் விசாரணை கமிட்டி' என்று பொய்யான தகவலை சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பெரியார் பல்கலை துணைவேந்தரும், பதிவாளரும் அமைச்சருக்கு பொய்யான தகவலை அளித்து, சட்டமன்ற உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சருக்கு தவறான தகவல்களை தெரிவித்த இவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்'' என்று திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.