Skip to main content

அம்புலி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018
kem ampuli aaru


ஆலங்குடியில் தொடங்கி செரியலூர்; கரம்பக்காடு வரை அம்புல ஆறு காட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழை காலம் தொடங்கும் முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்தால் தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு மேற்கில் இருந்து சிறிய அளவில் உருவாகும் அம்புலி ஆறு ஆலங்குடியிலிருந்து விரிவடைந்து பள்ளத்திவிடுதி, கொத்தமங்கலம், பனசக்காடு, மாங்காடு, கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு வரை விரிவடைந்து பெரிய அளவில் செல்கிறது. மழை காலங்களில் இந்த காட்டாற்றில் வெள்ளம் வரும் போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மிகப்பெரிய பாசன ஏரிகள், குளங்கள் நிறைந்து விவசாயத்திற்கு பயன்பட்டுள்ளது.

குளம், ஏரிகள் நிரம்பிய பிறகு மீண்டும் மாற்ற வாய்க்கால்கள் மூலம் ஆற்றுக்கே செல்லம் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்களில் நிரப்பி விவசாயம் செய்வதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் குறையாமல் காக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாலும் பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் செய்யப்படாததாலும் தண்ணீர் வரத்து இன்றி காணப்படுகிறது.

கீரமங்கலம், நகரம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருவதால் கடந்த ஆண்டு அப்பகுதி விவசாயிகள் ஏரி, குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை கண்டறிந்து சொந்த செலவில் விவசாயிகளே மராமத்து செய்தனர். அதன் பிறகு மழை இல்லாததால் ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. அதனால் மேலும் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிட்டது.

இந்த நிலையில் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லையான செரியலூர், கரம்பக்காடு வரை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பகளை அகற்றி அம்புலி ஆற்றை மராமத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் விடுத்த கோரிக்கையையடுத்து கடந்த மாதம் மாங்காடு, கீரமங்கலம், பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். அதில் பல இடங்களில் அம்புலி ஆறு சிறிய வாய்க்கால் அளவில் உள்ளதையும் பல நூறு ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். ஆனால் ஆய்வுக்கு பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கவில்லை.

அதிகாரிகள் அம்புலி ஆறு ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தகவல் அறிந்த விவசாயிகள்.. ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதையும், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதையும், ஆறு முழுவதும் மரம் செடி கொடிகள் மண்டி புதராக காட்சி அளிப்பதையும் அதிகாரிகள் ஆய்வில் கண்டறிந்து கணக்கிட்டுள்ளனர். ஆனால் ஆய்வு செய்யப்பட்டு சில மாதங்கள் கடந்துவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, மராமத்துப் பணிகளை தொடங்கவோ இல்லை.

அதனால் மழைக் காலம் தொடங்கும் முன்பே ஆக்கிரமிப்புகளை அகற்றி மராமத்து செய்து கரைகளை பலப்படுத்தினால் இந்த ஆண்டு மழைக்காவது அம்புலி ஆற்றில் தண்ணீர் செல்லும். அதன் மூலம் பாசன ஏரி குளங்களை நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாத்துக் கொள்ள முடியும். காலந்த கடந்தால் மழைத் தண்ணீர் வீணாகிப் போகும் என்றனர். நிலத்தடி நீரை சேமிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்தால் வசதியாக இருக்கும்.

 

சார்ந்த செய்திகள்