தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர். ஏற்கனவே அண்மையில் முன்னாள் மருத்துவத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், இன்று (22.10.2021) இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை தற்போது நடைபெற்றுவருகிறது.
சேலம் புத்திரக்கவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீடு, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. இன்று காலை 6 மணிக்கே சேலம் புத்திரக்கவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்ற நிலையில், வீடு பூட்டப்பட்டிருந்தது. பின் 5 மணி நேர காத்திருப்பிற்குப் பின் அதிகாரிகள் தற்போது வீட்டின் கதவைத் திறந்து சோதனையைத் தொடங்கினர். இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகியுள்ள இளங்கோவன், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். சென்னையிலிருந்து இன்று சேலத்தில் உள்ள வீட்டிற்கு வந்த இளங்கோவனை சூழ்ந்துகொண்ட அவரது ஆதரவாளர்கள், திமுகவிற்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அதேபோல் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.