இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஆயிரங்களில் அபராதம் விதிக்கப்படும், வியாபார லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்தது அரசு. அதன்படி தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. பின்பு அதிரடி சோதனைகள் மூலம் வணிகர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டது. வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
சாதாரண வியாபாரிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கும் அதிகாரிகள், பெரிய நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பேப்பர்களில் பேக் செய்யப்பட்டு வருவதை ஏன் தடுக்கவில்லை எனும் விவாதமும் எழுந்தது. வியாபார சங்கங்களின் எதிர்ப்பு போன்றவற்றால் பிளாஸ்டிக் விவகாரத்தில் அரசு இயந்திரங்கள் பின்வாங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் வழக்கம் போல் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் வியாபார கடைகள் அதிகமுள்ள நேதாஜி மார்க்கெட் மற்றும் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள கடைகளில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆய்வுசெய்தனர். 127 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் டீ கப்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவற்றைப் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை சுமார் 500 கிலோ இருக்கும் என்றார்கள் அதிகாரிகள். சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.