அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம், கட்சித் தலைமையகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது என எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு திங்களன்று விசாரணை வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது, கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது எனவும், கட்சியின் தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க கோருவதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண விவகாரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கையாடல் செய்துள்ளார் என்றும், கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டார். கட்சிக்கு எதிராக நடக்கும் ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையைக் கோர முடியாது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.