போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனைவிட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி, நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் தனது வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி பாரதிதாசன், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.