'No religious god has asked to occupy the road and build a temple' - Court opinion!

சாலைகளை ஆக்கிரமித்து கோவில்கள் கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை ஓட்டேரி பகுதியில் நடைப்பாதைகளை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் கடைகளை அகற்ற கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், பாதசாரிகள் நடக்க முடியாத அளவிற்கு நடைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கோவில்களும் அதன் அருகில் அனுமதி பெறாத கடைகளும் அதிகரித்து வருவதால் ஒட்டேரி செல்லப்பா சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்படுள்ளதாகவும் அதற்கான புகைப்படங்களையும் தாக்கல் செய்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் வெளிப்பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கோவிலை கூட நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

Advertisment

இதனை பதிவு செய்த நீதிபதிகள், சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களை கட்ட வேண்டும் என எந்த மதக்கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை ஆனாலும் மதத்தின் பெயரை எந்தெந்த வகையில் எல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே என வேதனை தெரிவித்தனர். அதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள் சாலை மற்றும் நடைப்பாதையை ஆக்கிரமித்ததாக மனுதாரர் தெரிவிக்கும் ஒட்டேரி பகுதியில் சாலை, நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.