திருவண்ணாமலையில் வரும் 13ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும் நிலையில் பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக திருவண்ணாமலையில் 25 தற்காலிக சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''திருவண்ணாமலை தீபத்தின் பொழுது எவரும் மலை ஏற அனுமதி இல்லை. எனவே பக்தர்கள் யாரும் மலை ஏற வேண்டாம். தீபம் ஏற்றுவோர்களுக்கு வனத்துறையினர் உதவி செய்வார்கள். மற்றவர்கள் யாரும் மலையேற வேண்டாம். மரபு மாறாமல் இத்தனை ஆண்டுகள் யாரெல்லாம் தீபம் ஏற்றினார்களோ அவர்கள் தான் இந்த வருடமும் தீபம் ஏற்றுவார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
கொப்பரை, நெய், திரி ஆகியவற்றை வழக்கமாக கொண்டு செல்லும் நபர்களேதான் செல்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பிற்காக வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள், தீயணைப்புத் துறையினர் அனுப்பப்பட உள்ளனர். அதேநேரம் அண்ணாமலையார் மலை மீது பக்தர்கள் யாரும் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலங்களில் இருந்த எந்த விதமான சிரமங்களும் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கும், பக்தர்களுக்கும் இருக்கக் கூடாது என வலியுறுத்தி இருக்கிறோம். காவல்துறையும் அவ்வாறே செயல்பட காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். எனவே அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்'' என்றார்.
Published on 11/12/2024 | Edited on 11/12/2024