சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளியில் இருந்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அதே சமயம் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினோம். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 13 தனியார் பள்ளிகளும் இன்று (09.02.2024) வழக்கம்போல் செய்ல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சென்னை போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இண்டர்போல் போலீசின் உதவியை நாட சென்னை போலீசார் முடிவெடுத்துள்ளனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு வழங்கவும் சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் 4 பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடக்கிய சாலைப்பாதுகாப்பு குழுவை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மர்ம நபர்கள் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து பேசுகையில், “இது குறித்து நேற்றே வழக்குப்பதிவு செய்துவிடோம். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கட்டாயம் பிடித்து சரியான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் இது குறித்து முழுவதுமாக சொல்ல முடியாது. இதே போன்று பல்வேறு வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே வெடிகுண்டு மிரட்டல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்” எனத் தெரிவித்தார்.