Skip to main content

‘குடியிருக்க வீடில்லை... 50 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பலனில்லை’ - போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

No house to live in, People involved in the struggle

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது செங்கமேடு கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் காலங்காலமாக குறுகிய இடப்பகுதியில் வசித்துவருகிறார்கள். கால ஓட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் பிறந்து வளர்ந்து, திருமணமாகி, அவர்களுக்குக் குழந்தைகள் என மக்கள் தொகை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் அதற்கேற்றவாறு அவர்கள் குடியிருக்க போதிய அளவு இட வசதியும் இல்லை, வீடும் இல்லை. எனவே காலங்காலமாக குடியிருக்க வீடு இல்லாத தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா தர வேண்டும் என்கிறார்கள். இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மனுக்கள் கொடுத்து பார்த்துவிட்டார்கள்.

 

எனினும், அவர்களது குடியிருப்பை விரிவுபடுத்துவதற்கு அரசு அதிகாரிகள் இடம் ஒதுக்கித் தரவில்லை, கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், அவர்கள் ஏற்கனவே இந்த நெருக்கடியில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் பகுதியை ஒட்டி கோயிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதில் பல பட்டியலின குடும்பத்தினர் அவர்களாகவே சென்று குடிசை போட்டு வாழ்ந்துவருகிறார்கள். அந்தப் பகுதிக்கு சாலை வசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதி இப்படி எந்த வசதியும் செய்து தரப்படவில்லை. காரணம், அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது. அந்த இடத்தை யாருக்கும் பட்டா கொடுக்க முடியாது. அதையும் மீறி அந்த இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி செய்து கொடுக்க அரசு சட்ட விதிமுறைகளில் இடமில்லை என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.  

 

No house to live in, People involved in the struggle

 

இதனால் அந்த மக்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச வீடு கட்டும் திட்டம் உட்பட எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை. ‘இப்படிப்பட்ட நிலையில், அந்தக் குடிசைகளில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது  குடிசைப்பகுதிக்கு நடந்து செல்கிறோம். குடிசைப்பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த வனம் போன்ற காடுகள் உள்ளன. அப்பகுதியில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளன. இவ்வளவு துன்பத்துடன் துயரத்துடன் சிரமத்துடன் அந்தக் குடிசை பகுதிகளில் வாழ்ந்துவருகிறோம். சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. இதையடுத்து, பாதுகாப்பு தேடி அலைந்தோம். எனவே எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.’

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தயா பேரின்பன் தலைமையில் 23ஆம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அம்மக்கள் அறிவித்தனர். அதன்படி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சமையலுக்குத் தேவையான பொருட்கள் பாத்திரங்கள், பாய், தலையணை, படுக்கை என ஊர்வலமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்குள் குடியேற முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

No house to live in, People involved in the struggle

 

அப்போது அதிகாரிகள் தரப்பில் விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். காலதாமதம் செய்தால் மீண்டும் போராட்டத்தில் இறங்கப் போவதாக செங்கமேடு பட்டியலின மக்கள் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்