Skip to main content

'நிவர்' புயல் எச்சரிக்கை பணிகள்! - தொகுதியை ஆய்வு செய்த தமிமுன் அன்சாரி!

Published on 24/11/2020 | Edited on 25/11/2020

 

sdf

 

நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், மக்களை முன்னெச்சரிக்கையாக மீட்கும் பொருட்டு, நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி இரண்டு நாட்களாக தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார்.

 

திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தவர், தொடர்ந்து நாகை ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் செய்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார். மக்கள் தங்குவதற்கு, திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்களை ஏற்பாடு செய்ததோடு, ஒவ்வொரு ஊராட்சியிலும் மரம் அறுக்கும் இயந்திரம், பொக்லைன் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்குமாறு வி.ஏ.ஒ மற்றும் ஊராட்சி செயலாளர்களைக் கேட்டுக் கொண்டது கிராமப்புற மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

gh

 

நாகை, நாகூர் நகராட்சிப் பகுதிகளில் சாக்கடை தூர்வாரல், மின் கம்பங்களைச் சீரமைத்தல் போன்ற பணிகளைத் தீவிரப்படுத்தி, நகராட்சி ஆணையரிடம் இப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து, மேல் நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆங்காங்கே ரேஷன் கடைகளுக்கும் விசிட் செய்து பொருட்களின் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அங்கு நின்ற மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். பிறகு கடலோர மீனவ கிராமங்களுக்குச் சென்று, அவர்களின் நிலைகளைக் கேட்டறிந்து, படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட அறிவுறுத்தியது மீனவர்களை நெகிழச் செய்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தஞ்சையில் பச்சைக்கொடி பேரணி! - காவிரி உரிமை மீட்புக்குழு அறிவிப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

 Green flag rally in Tanjore! -Cauvery Rights Rescue Committee announcement!

 

இன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ம.ஜ.க பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ மு.தமிமுன் அன்சாரி, விவசாயச் சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் மருத்துவர் பாரதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

 

இதில், டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் உழவர் ஒழிப்புச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், எதிர்வரும் ஜனவரி 21 வியாழன் அன்று காலை, தஞ்சாவூரில் பிரம்மாண்ட பச்சைக் கொடி பேரணி நடத்துவது என்றும் முடிவானது.

 

அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் இந்தச் சட்டங்களின் பாதகங்களை விளக்கி துண்டுப் பிரச்சார பரப்புரை நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்களும், போராட்ட ஆதரவாளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களும், வெளிநாடுவாழ் தமிழர்களும் அன்று காலை சமூக இணையதள வழியான போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில், ம.ஜ.க மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணிச் செயலாளர் அப்துல் சலாம், திருவாரூர் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எரவாஞ்சேரி நஜ்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

 

Next Story

சென்னையில் கவர்னர் மாளிகை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: ம.ஜ.க. அறிவிப்பு 

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

mjk party



மத்திய அரசு அங்கு அமைதியான சூழலை உருவாக்கி, பொதுமக்களை அச்சமின்றி வாழ செய்யும் வழிமுறைகள் குறித்து முன் முயற்சிகளை எடுக்காமல், அங்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறப்பு உரிமைகளை ரத்து செய்து,  முன்னாள் பிரதமர் நேரு, ஐநாவில் அளித்த வாக்குறுதிகளை மீறும் வகையில் செயல்பட நினைப்பது குறித்து கவலையுடன் ஆய்வு செய்யப்பட்டது.
 

இச்சூழலில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் நாம் உறுதியாக நின்று, உலகிற்கு காட்ட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
 

காஷ்மீரில் அமைதியை குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும், ஜனநாயக வழியில் எதிர்ப்பதும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 
 

தற்போது அங்கு அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை (06.08.2019) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 

இதில் சமூக நீதி கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், என அனைவரையும்  ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.