பொங்கல் விடுமுறை காரணமாக சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பொங்கல் நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியூர்களுக்குச் செல்வார்கள் என்பதால் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பரவல் நாடுமுழுவதும் அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. எனவே அரசு கொடுத்த கரோனா கட்டுப்பாடுகளின்படி அரசு பேருந்துகள் 75 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகிறது.
தமிழக அரசு ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில் பொங்கல் விடுமுறைக்காக பகலிலேயே ஊர் திரும்ப முடிவெடுத்து மக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துள்ளதால் செங்கல்பட்டில் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு பாலாற்றிலிருந்து சுமார் 3 கிலோமீட்டருக்கு இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.