கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று (08/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுகிறது.
தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்கலாம். அதேநேரம், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளின் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நண்பகல் 12 மணிவரை ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள், காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை ஆர்டர் செய்யலாம்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு (காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்) செயல்பட அனுமதி.
தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.
விடுதிகளில் (Hotels and Lodges) தங்கியுள்ளவர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை. அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மட்டும் இயங்க அனுமதி.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படுகிறது. சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, மருத்துவமனை செல்வதற்கு மட்டும் உரிய ஆவணங்களோடு பயணம் மேற்கொள்ளலாம்.
மாநிலம் முழுவதும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சித் துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை இயங்கும்.
உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றிற்குத் தடை.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.