தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியிருக்கும் நிலையில், தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.