என்.எல்.சி. இந்தியா நிறுவன விரிவாக்கத் திட்டங்களுக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான (R&R பாலிசி) புதிய திட்ட கொள்கைகள் குறித்த இந்திய அரசு வெளியிட்ட சட்ட திருத்த வெளியீடு நிகழ்ச்சி நெய்வேலி லிக்னைட் அரங்கில், என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. என்.எல்.சி இயக்குநர்கள் ஷாஜிஜான், ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன், ஒற்றாடல் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி புதியதிட்டக் கொள்கைகளை வெளியிட்டு பேசுகையில், "என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு நிலங்களைக் கொடுத்தவர்களுக்காக புதிய மறுவாழ்வு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்.எல்.சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல வாய்ப்புகளை அளிக்கும் இலகுவான மறுவாழ்வு கொள்கையை உருவாக்கிய என்.எல்.சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை புதிய மறுவாழ்வு கொள்கை உறுதி செய்துள்ளது. திறன் இந்தியா திட்டத்தில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்.எல்.சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நிலையான வாழ்வாதாரத்திற்கும் ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்பு உடையதாக மாற்றவும் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு கொள்கை வழி வகுக்கும். இதன்மூலம் கிராம மக்களுக்குப் பயனளிப்பதோடு என்.எல்.சி நிறுவனத்தின் உற்பத்தியும் அதிகரிக்கச் செய்யும்" என்றார்.
இந்தப் புதிய கொள்கையின் படி 01.01.2021க்கு பிறகு கையகபடுத்தப்பட்ட நிலங்களுக்கு 23 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மேலும் வேலைவாய்ப்பு அல்லது இருபது ஆண்டுகளுக்கு மாதம் மாதம் 7000 லிருந்து 10,000 வரை அல்லது 5 லட்சம் முதம் 10 இலட்சம் வரை வழங்கவும், கூடுதலாக வீட்டுமனைகளில் 2400 சதுரடி மனையில் 1000 சதுரடி வீடு கட்டித்தரவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் தொடர்வண்டித்துறை இணையமைச்சர் இராசாஹேப் பாட்டீல் தன்வே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, நிலக்கரித்துறை செயலாளர் அனில்குமார் ஜெயின், கூடுதல் செயலாளர் நாகராஜுலு ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
அதேசமயம் இந்தப் புதிய கொள்கையில் குறிப்பிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு உறுதி செய்ய வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் புதிய கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பா.ம.க.வினர் நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியில் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.