தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகமாக இருப்பதால், கட்டுப்பாட்டு நடவடிக்கையாக 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல, கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோருக்கு முதற்கட்டமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு அதன்பின்பு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், சில மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் அவசர சிகிச்சைக்காக வருவோருக்குப் படுக்கை வசதி இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்களிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் சூழலும் சில இடங்களில் நிலவிவருகிறது. அவ்வாறு ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் வைக்கப்படுவதால் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மக்களுக்கும் உதவும் வகையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரியில் கிரெடாய் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அவசர ஊர்தியில் வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் வைத்து தற்காலிகமாகச் சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.