சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15/06/2021) ஆலோசனை நடத்தினார். புதிய மாவட்ட ஆட்சியர்களில் 22 பேர் நேரிலும், மற்ற 2 மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "எனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல; மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனையைக் கேட்கும் அரசு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழகத்தை உருவாக்குவோம். நகர்ப்புற வளர்ச்சியும், ஊரக வளர்ச்சியும் தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். கரோனா தொற்று பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி, வேலை வாய்ப்பில் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட மாவட்ட ஆட்சியர்கள் கடமையாற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் ரேஷன் அட்டை கிடைக்கவும், போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.