பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து வரும்போது, நடுவழியில் அவர்களின் உறவினர்களை சந்திக்க வைத்த சம்பவத்தில் சேலம் ஆயுதப்படை எஸ்.ஐ. உள்பட 7 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர்.
இவர்கள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்சொன்ன 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக். 20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 9 பேரும் இரு வாகனங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை அழைத்துச் சென்ற வாகனம் மட்டும் கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென்று நிறுத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே காத்திருந்தனர். இதையடுத்து, 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினர்களிடம் சந்தித்து சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியது.
இந்நிலையில், தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் இவர்களுக்கு சேலம் மாநகர காவல்துறை அளித்துள்ள இந்த சலுகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுக்கு வழிக்காவல் பணிக்குச் சென்றது சேலம் மாநகர ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது.
வழிக்காவல் பணியின்போது கவனக்குறைவாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாக சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 7 பேரையும் ஆணையர் நஜ்மல் ஹோடா அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு, புதன்கிழமை இரவே பிறப்பிக்கப்பட்டது.
இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க விரும்புவோர் அதற்கென முறையாக விண்ணப்பம் செய்து, சிறைத்துறையில் அனுமதி பெற்ற பிறகே சந்திக்க வேண்டும். ஆனால், நடுவழியில் கைதிகளை உறவினர்களுடன் சந்திக்க வைத்தது நடைமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, கைதிகளுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.