தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாச்சலத்தின் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சுப்ரியா சாகுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இந்த உத்தரவைத் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்குக் கூடுதலாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெங்கடாச்சலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் பல கிலோ தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019-ல் வெங்கடாசலம் தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முறைகேடுகள் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.