நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் கடந்த 14ந் தேதி இரவு பாறை சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு கற்களை லாரிகளில் ஏற்றி கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதில் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார் குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட செல்வம் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாறைகளுக்குள் சிக்கி உள்ள மேலும் 2 பேரை மீட்கும் பணி இன்று 3வது நாளாக நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் இன்று நெல்லைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் பேரில் மீட்ப பணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.