நெல்லையின் முன்னீர்பள்ளம் அருகிலுள்ள அடைமிதிப்பான் குளத்தின் கல்குவாரியில் விதியை மீறி இரவில் வெடிவைத்துப் பிளந்ததில் ஆயிரக்கணக்கான டன் எடை கொண்ட உச்சிப் பாறைகள் பெயர்ந்து விழுந்ததில் 400 அடிக்குக் கீழே கற்களை லோடு செய்யும் பணியிலிருந்த 3 லாரி டிரைவர்கள், 3 ஹட்டாச்சிகளின் ஆபரேட்டர், என 6 பேர் மீதும் பாறைகள் சரிந்து விழுந்து அமுக்கிக் கொண்டன. இடிபாடுகளில் வாகனங்களும் சிக்கிக் கொண்டன. கடந்த 14ம் தேதியன்று நடு இரவில் ஏற்பட்ட இந்த பயங்கர விபத்து பற்றிய தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. சரவணன், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தவர், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தூத்துக்குடியிலிருந்து உயரமான கிரேன்களை வரவழைத்து மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினார்.
ஆரம்ப கட்டத்தில் சில மணி நேரத் தேடலுக்குப் பின்பு பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்ட முருகன், விஜயன் இருவரும் மீட்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொடர் தேடலில் 17 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபரான செல்வம், சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து சிக்கிய மீதமுள்ள மூன்று பேரைத் தேடும் பணியின் போது உச்சிப் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுந்து கொண்டேயிருந்ததால் மீட்பு படையினருக்கு ஆபத்து நேரலாம் என்பதால் தற்காலிகமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார் மாவட்ட ஆட்சியரான விஷ்ணு.
மேலும் மீட்பு பணிக்காக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். கிரேன்களின் மூலமாக ரோப்களிலிறங்கி மீட்புப் பணியை மேற்கொண்ட பேரிடர் படையினர் ஆயன்குளம் முருகன் என்பவரின் உடலை மீட்டனர். இதனால் விபத்தின் பலி 2 என்ற அளவிலிருந்தது. 2 பேர் மீட்கப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் கடந்த பின்பும் மீதமுள்ள 2 பேரும் சிக்கிய இடத்தையறிய மீட்பு படையினருக்கு பெரும் சவாலாக இருந்தது.
இதனிடையே மீட்கப்பட வேண்டிய டிரைவர்களான செல்வக்குமார், ராஜேந்திரன் இருவரது குடும்பத்தார்களும் கண்ணீரும் கம்பலையுமாக கலெக்டரிடம் மீட்கும்படி கோரிக்கை வைத்தனர். ஒருபுறம் பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுந்தது பேரிடர்படையினருக்குச் சவாலாக இருந்தாலும், அவர்களின் பணி தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டது. சிக்கியவர்களின் இருப்பிடம் பற்றிய அடையாளம் காண காவல்துறையின் டாக் ஸ்குவாடின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், பேரிடர்படையின் அயராத முயற்சியாலும் 90 மணி நேரப் போராட்டத்திற்குப்பின் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்த செல்வகுமாரின் உடலை மீட்டனர். இதனால் விபத்தின் பலி மூன்றாக உயர்ந்தது.
கடைசியாக சிக்கிய 6வது நபரை தேடும்பணி 94 மணி நேரத்திற்கும் பின்பும் நீடிக்கிறது. குவாரி உரிமையாளர் செல்வராஜ். அவரது மகன் குமார், ஒப்பந்தகாரர் சங்கரநாராயணன், மேலாளர் செபஸ்டின் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சங்கரநாராயணன், ஜெபஸ்டின் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் செல்வராஜ் அவரது மகன் குமார் இருவரும் தலைமறைவானதால், செல்வராஜின் ஒரு கோடி ரூபாய் பேலன்ஸ் வங்கி கணக்கினை எஸ்.பி.சரவணன் முடக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
கனிமவளத்துறையின் உதவி இயக்குனர் வினோத் சஸ்பென்ட் செய்யப்பட்டதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்திருக்கிறார்.