Skip to main content

"கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

 

neet exam students incident chief minister mkstalin speech

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "எல்லோருக்கும் வணக்கம்! கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக் கொண்டேன்.

 

ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்துவிட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.

 

பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான் நீட் தேர்வு. ஏழை, எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்று தான், தி.மு.க. இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதற்கு முன்னாள் நாம் பொறுப்பில் இருந்த போதும் இந்த தேர்வை நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்த தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.

 

மருத்துவம் படிக்க வேண்டும், டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.  

 

கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய  கருத்துக்களைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது. 

 

அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12- ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

இந்த கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லை, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது. 

 

உங்களுடைய உயிர், விலை மதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.  அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்கிறேன்.

 

உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள். 

 

கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும். 

 

முயற்சிதான் வெற்றியைத் தரும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய துணிச்சலும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ, மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

 

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைப்பேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ, மாணவியருக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன், உள்ள நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

 

ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்குத் தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து, மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.

Next Story

“எங்கள் காதுகள் பாவம் இல்லையா?” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
CM Stalin's speech at election campaign in vadachennai for lok sabha election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

தமிழகத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வுக்கும், வட சென்னைக்குமான உறவு தாய் - சேய் உறவு போன்றது. என்னை முதலமைச்சராகிய கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கியது வடசென்னை.

பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. 

பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறிய வாக்குறுதிகளைப் பாஜக நிறைவேற்றியதா? இந்தியாவில் இதுவரை 14 பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஆனால் மோடி போல் மோசமான பிரதமர் யாருமில்லை. விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வசூல்ராஜாவாக மோடி திகழ்கிறார். தொழில் முனைவோர்களையும் மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்குவது பாஜகவின் வாடிக்கை.

இதுவரை இருந்த பிரதமர்களில் மோடியைப் போன்ற மோசமான பிரதமரை நாடு பார்த்ததில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை வைத்து கட்சிகளை உடைப்பது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, முதல்வர்களை கைது செய்வதைத்தான் மோடி செய்கிறார். விவசாயிகளுக்காக எந்த ஒரு வாக்குறுதியையும் பாஜக வழங்கவில்லை. வாக்குக்காக மலிவான அரசியலை மோடி செய்து வருகிறார். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் சுய விளம்பரத்துக்கு மட்டுமே மோடி முக்கியத்துவம் தருகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மோடியல்ல யாருமே முடிவு செய்யக்கூடாது.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய சிறு, குறு தொழில்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்துறை சரிவை சரிசெய்ய மோடி நடவடிக்கை எடுத்தாரா? தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிய போது மோடி ஏன் மௌன குருவாக இருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்தலுக்கு முன்பே கட்டி முடித்து விடுவோம் என்று எண்ணம் மோடிக்கு வந்ததா? வெறும் ரோடு ஷோ மட்டும் காட்டிவிட்டு செல்வதற்கு பிரதமர் மோடி வெக்கப்பட வேண்டாமா? கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 10.5 லட்சம் கோடி கொடுத்துள்ளதாக பச்சை பொய் சொல்லி விடுவது பாஜக. மெட்ரோ திட்ட பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக மாநில அரசே நிதி ஒதுக்கி செலவு செய்கிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மோடி அரசு நிதி தராமல் இழுத்து அடித்து இருக்கிறது. மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டு ரூ.2 லட்சம் கோடியை கொடுத்து விட்டோம் என்கிறது பாஜக. எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா? 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளையும் மோடி பட்டியலிட தயாரா? ஏழை மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கம் ஏழை மக்களே நடுத்தெருவில் நிறுத்துவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டியை விதித்து ஏழை மக்களிடம் கருணையற்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்கிறது” எனப் பேசினார்.