நீட் நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கேட்டு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் மற்றும் நீட் தேர்வு எழுதிய பிறகு மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைக்குமா, கிடைக்காத என்ற அச்சத்தில் கடந்த சில தினங்களில் மட்டும் அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும் மாணவ, மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல், நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமா அல்லது இணை படிப்புகளைப் படிக்க வேண்டுமா என்பதை சம்மந்தப்பட்ட மாணவரே முடிவு செய்ய முடியும். எதிர்க்கட்சித் தலைவர் அல்ல.மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கும், திறமைக்கும் ஏற்ப பாடத்தைப் படிக்கக் கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பது நமது கடமை.
அந்த. கடமையைச் செய்யத் தவறிவிட்டு,பா.ஜ.க.விற்கும்,நரேந்திர மோடிக்கும் கை கட்டி சேவகம் செய்துவிட்டு மாணவர்களை மருத்துவம் படிக்க ஆசைப்படாதீர்கள் என்று சொல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.