தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். நடப்பு 2022 - 2023ம் கல்வி ஆண்டில் 9, 10 மற்றும் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமையால் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்களை, அதன் இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படும் 9, 10ம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய், 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 1.25 லட்சம் ரூபாய் பள்ளிக்கட்டணம், விடுதிக் கட்டணங்கள் சேர்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஆக. 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், இணையவழியில் விண்ணப்பம் சமர்ப்பித்ததில் ஏதேனும் விவரங்கள் விடுபட்டு இருந்தால் அதை சரி செய்து கொள்ள இன்றும், நாளையும் (ஆக. 30 மற்றும் 31ம் தேதி) அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
நுழைவுத்தேர்வு வரும் செப். 11ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு செப். 5ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தொலைபேசி எண், ஆதார் எண், ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.