Skip to main content

கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் கட்சி புகார்...

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

National People's Party complains to take action against KS Alagiri ...

 

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல் ரவி, சென்னை  உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

கடந்த அக்டோபர் 1 ம் தேதி மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இதனால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து  நெரிசலில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது.

 

பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க  உத்தரவிட்டிருந்தார்

 

அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை  நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

இதை விமர்சித்து,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.

 

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறிப்  பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

கே.எஸ்.அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவரும்,வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

 

இந்த நிலையில், இன்று  தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்