Skip to main content

"நடராஜரும் நானும்; இடையில் நாரதர்கள் வேண்டாமே..." - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

"Nataraja and I; no Naradars in between..." - Puducherry Governor Tamilisai

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆனித்திருமஞ்சன உற்சவம் நடைபெற்றது. அதனையொட்டி அக்கோவிலுக்கு சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சுவாமி வழிபாடு செய்ய படிக்கட்டில் அமர்ந்தார். அப்போது ஒரு தீட்சிதர் வந்து,  "இங்கு உட்காரக்கூடாது, சற்று தள்ளி உட்காருங்கள்" எனக்கூறி அவமதித்ததாக தகவல் பரவியது.

 

இதுகுறித்து நேற்று மாலை புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடந்த மாநில திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு அவர், "சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை. நான் நேராக சென்று படிக்கட்டில் அமர்ந்தேன். ஒருவர் வந்து என்னிடம், 'இதற்கு அப்பால் நிறைய இடம் உள்ளது. அங்கு சென்று உட்காருங்கள்' என்றார். 'இல்லை நான் இறைவனைப் பார்க்க வந்துள்ளேன். இங்கு நன்றாக தெரிகிறது இங்குதான் உட்காருவேன்' என்று சொன்னதும் அவர் சென்று விட்டார். நான் படியில் கூட உட்காரவில்லை. நான் இறைவனைப் பார்க்க சென்றேன். யாரோ ஒருவர் வந்து சொன்னார். அதனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்ற எல்லா தீட்சிதர்களும் என்னிடம் வந்து இறைவனுக்கு அளித்த மாலை மற்றும் பிரசாதம் கொடுத்தனர். வேறொன்றுமில்லை. சிதம்பரம் கோவிலுக்கு பிரச்சனை தீர்க்கலாம் என்று வந்தால், பிரச்சனை வருவதே பிரச்சனையாக இருக்கிறது போலும். தீட்சிதர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டு. அதற்கு சிவன் உள்ளார்" எனக் கூறினார். 

 

இதனிடையே இதுகுறித்து தமிழிசை செளந்தர்ராஜன் முகநூலில் 'நானும் நடராஜரும்' எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 

 

நடராஜரும்.... நானும்.. இடையில்... நாரதர்கள் வேண்டாமே! 

 

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனம் தரிசனத்திற்கு சென்றபோது நடந்த சுவையான சம்பவம்.

 

இன்று (6.7.22) அதிகாலை 05:00 மணிக்கு சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் கலந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்வதற்காக சென்றேன். திருக்கோவில் நிர்வாகத்தினர் என்னை கோவிலில் வெளியே வந்து உள்ளே அழைத்துச் சென்று திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோவிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். பொதுமக்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்று என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளை ஓரமாக அமர வேண்டும் என்று சொல்லி நானும் பொது மக்களின் தரிசனத்திற்கு இடையூறு இல்லாமல் ஓரமாக அமர்ந்து கொண்டு இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். 

 

"Nataraja and I; no Naradars in between..." - Puducherry Governor Tamilisai

 

இறைவனுக்கு நடைபெற்ற ஒவ்வொரு அபிஷேகத்திற்கு பின்பு இறைவனின் சந்தனம், மாலை போன்றவற்றை அளித்தார்கள். நானும் என்னருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இறைவனை தரிசனம் செய்து கொண்டிருந்தேன். யாரும் எனக்கு இடையூறு செய்யவில்லை. நானும் யாருக்கும் இடையூறு செய்யவில்லை. தரிசனத்திற்கு இடையில் ஒருவர் என்னிடம் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். நான் அதற்கு அபிஷேகம் எனக்கு நன்றாக தெரிகிறது நான் இங்கேயே அமர்ந்து கொள்கிறேன் என்று மட்டும்தான் கூறினேன்.

 

அதற்கு பின்பு  அபிஷேகம் முடிந்தவுடன் சந்தனம், மாலை கொடுத்தார்கள். நிறைவாக இறைவனுக்கு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. தங்க காசுகளால் நடைபெற்ற சொர்ணாபிஷேகத்தை மகிழ்ச்சியாக  தரிசனம் செய்து கொண்டிருந்தேன். சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் அப்போது தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்தார். 

 

"Nataraja and I; no Naradars in between..." - Puducherry Governor Tamilisai

 

லட்டுகளை கொடுத்துவிட்டு தீட்சிதர் என்னிடம், 'இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது. இதை உங்களிடம் சொல்வதற்கு மிக ஆனந்தமாக உள்ளது' என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். அப்போது அவர், 'லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தை பாருங்கள்' என்று கூறினார். நானும் பிரித்து பார்த்தேன் அதில் என்னுடைய வண்ணப்படம் இடம் பெற்றிருந்த ஒரு செய்தித்தாள். அப்போது தீட்சிதர் என்னிடம், 'கவர்னருக்கு லட்டு கொடுக்க வேண்டும், ஒரு காகிதம் கொடுங்கள்' என்று மற்றொரு தீட்சிதரிடம் கேட்டேன். அவர் கொடுத்த காகிதத்தில் உங்கள் படம் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆகையால் இந்த லட்டை உங்கள் படத்தோடு உங்களுக்கு தருகிறேன். இது உங்களுக்கு நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசீர்வாதமாக எனக்கு தோன்றியது' என்றார். 

 

இது ஒரு சுவையான அனுபவம்; காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் இறைவனை தரிசனம் செய்து விட்டு இறை அருளோடு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோவிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புறந்தள்ளுகிறேன். சுவையான சம்பவங்களை நான் மனதில் எடுத்துக்கொள்வதும் நேர்மறையான சிந்தனைகளையே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு தந்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு மற்றவர்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.