நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அண்மையில், கூட்டுறவுத்துறை பதிவாளர் வெங்கடாசலம் திடீர் ஆய்வு செய்தார்.
இதில், 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் உள்ள கணக்குகளை ஆய்வு செய்தபோது 2.40 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர், நாமக்கல் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப்பிரிவில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 13 பேர் கூட்டாக சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதாகக்கூறி, போலி கணக்கு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக சங்கத்தின் தற்போதைய செயலாளர் ரவி (57), சங்க பணியாளர்கள் கதிர்வேல் (65), தங்கராஜ் (62), காவுத்கான் (60), கம்பராயன் (64), தங்கவேல் (60) ஆகிய 6 பேரை காவல்துறையினர் வியாழக்கிழமை (அக். 8) கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய சங்கத்தின் முன்னாள் செயலாளர் சபரி உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.