
ஏழு பேர் விடுதலைத் தொடர்பான தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதா அல்லது ஏழு பேரின் வழக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக, கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நீண்ட காலமாக ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் கைதியை எப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும்? மேலும், முன் கூட்டியே விடுதலைச் செய்ய நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தில் பேரறிவாளன், விவகாரம் மட்டுமே குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டதா? என விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.