
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பள்ளிகளில் பயிலும் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருகிறோம்’ என்று கூறி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், “திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. சுகாதாரமான குடிநீர், மாற்று கழிவறை இல்லை. இருக்க கூடிய கழிவறையையும் மாணவர்கள் பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதிப்பது இல்லை” என மனு அளித்திருந்தனர். மேலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை இன்று (06.12.2021) காலை நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும், இப்பிரச்சினையை நக்கீரன் மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கவனத்திற்கு எடுத்துச் சென்றபோது, உடனடியாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் பேசி, அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு திருச்சி முதன்மை கல்வி அலுவலருக்குப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டு, தற்போது அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்குச் சென்று, ஆய்வு நடத்தி, அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.