Skip to main content

நக்கீரன் நியூஸ் எஃபெக்ட்! போலீஸுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
sa

 

நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்ட பிரத்யேக செய்தியைத் தொடர்ந்து காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மனித உரிமை ஆணையம்.

 

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தியை விசாரணை என்கிற பெயரில் கையை உடைத்தது புழல் காவல்நிலைய போலீஸ்.  கைதியை பரிசோதித்த அரசு ஸ்டேன்லி மருத்துவனை டாக்டர்களோ,  "எலும்பு சிகிச்சை நிபுணர் சிகிச்சை அளிக்கவேண்டும்" என்று பரிந்துரை செய்தனர். ஆனால், கைதிக்கு சிகிச்சையளிக்காமலேயே புழல் சிறையில் அடைக்கவந்தார் புழல் காவல்நிலைய எஸ்.ஐ. சதீஷ். 

 

கைதியை பரிசோதித்த புழல் சிறை மருத்துவர்களும் சிறைத்துறை அதிகாரிகளும் கைதியை சிறையில் அடைக்க மறுத்துனர். மேலும், "கைதியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளித்துவிட்டு வந்தால்தான் சிறையில் அடைக்க முடியும். இல்லையென்றால், கைதியின் குடும்பத்தினர் மனித உரிமை ஆணையத்தை நாடினால் எங்களுக்கு பிரச்சனை வரும்" என்று அனுமதி மறுத்தனர். 

 

இதனால், புழல் காவல்நிலைய எஸ்.ஐ. சதீஷ் சிறைத்துறை அதிகாரிகளை மிரட்டியதோடு மாதவரம் உதவி கமிஷனர் பிரபாகரனுக்கு ஃபோன் செய்து, ஃபோனை சிறைத்துறை உதவி ஜெயிலர் பிச்சாண்டியிடம் கொடுக்க உதவி கமிஷனரும் மிரட்டியுள்ளார். மேலும், அனுமதிக்காத மருத்துவர்களையும்  மிரட்டியுள்ளார். இதுகுறித்து, துணை கமிஷனர் கலைச்செல்வனிடம் புகார் கொடுத்தார் புழல் சிறை மருத்துவர் நவீன்குமார். ஆனால், மிரட்டிய எஸ்.ஐ. சதீஷ் மற்றும் ஏ.சி. பிரபாகரன் மீது  துணை கமிஷனர் கலைச்செல்வன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இதுகுறித்து, கடந்த 2018 ஜூலை-30  ந்தேதி "புழல் கைதியின் கை உடைப்பு! சிறைத்துறையை மிரட்டிய காவல்துறை!"  https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-1 என்ற தலைப்பில் நக்கீரன் இணையதளத்தில் மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டு உள்ளிட்ட ஆவணப்பூர்வமான ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும், தமிழ் ஊடகத்தில் நக்கீரன் இணையதளத்தில் மட்டுமே இச்செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில்தான், ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்